அவள் பேசுகிறாள்>>>>>>
****************
நீ என்னைக் காதலிக்க ஆரம்பித்து
இத்தனை நாட்கள் ஆகியும்
என்னிடம் காதலை சொல்லாமல்
நீ தவிப்பதை பார்த்து
என்ன இவன் இவ்வளவு
பயந்தாங் கொள்ளியாய்
இருக்கிறான் என்று
கவலை எல்லாம் கொள்ளவில்லை நான்...
காதலை சொல்ல இப்படி தவிக்கிறான் எனில்
கண்டிப்பாய் இதுதான் இவனுக்கு
முதல் காதலாய் இருக்கும் மகிழ்ச்சியில்
உன் தவிப்பை ரசித்து கொண்டு இருந்தேன்...
---
நீ இல்லாமல் உயிர் வாழ முடியாது என்று
நீ சொல்வதை நான் நம்ப மாட்டேன்...
நீ பிறந்து மூன்று வருடங்கள் கழித்து தானே...
நான் பிறந்தேன்...
அந்த மூன்று வருடங்கள்
நான் இல்லாமல்தானே
நீ உயிர் வாழ்ந்திருக்கிறாயே...
--
என்னடி ஆம்பளை மாதிரி
நகம் வளர்க்கிறாய் என்று
என்னை என் அம்மா
எத்தனை முறை திட்டினாலும்...
நான் இந்த நகத்தை மட்டும் வெட்ட போவதில்லை....
காரணம்...இந்த நகம் தான்
உன்னை முதன் முதலில் தொட்ட நகம்...
நான் தூங்குவதாக நினைத்து
நீ என் தலையை கொதிவிடுவதை
ஒரு அரை தூக்க நாளில்
நான் கண்ட பிறகுதான்
தூங்குவது மாதிரி
எப்படி நடிப்பது என்பதை
கற்று கொள்ள தொடக்கி விட்டேன்...
--
பிரசவத்திற்கு வீட்டிற்கு வந்திருக்கும்
நம் மகள் என் தலை முடியை பார்த்து
என்னம்மா தலை எல்லாம் நரைத்துவிட்டது என்றதும்
குறுக்கே புகுந்த நீங்க...
இது நரையா...
முப்பது வருடங்களாய் மல்லிகை பூவை
சூடி சூடி இவள் கூந்தலும்
மல்லிகை பூவை மாறிவிட்டது என்றீர்கள்....
--
பக்கத்து வீடுகளில்
கணவன் மனைவி சண்டை
நடக்கும் போதெல்லாம்
என்னிடம் சண்டை போட தெரியாத
உன்னை கட்டி கொண்டு அழுவேன்....
என்ன செய்வது...
காதலை எனக்கு கண்ணீராக
சிந்தத்தான் தெரிகிறது.....
மண மேடையில்
உங்கள் கையை பிடித்தபடி
அக்னியை வலம் வந்த போது
யாருக்கும் தெரியாமல்
நீங்க என்னை கிள்ளியதை பார்த்துவிட்ட அக்னி சொன்னது...
இவன் உன்னை
கைவிட மாட்டான் என்பதற்கு
இந்த கிள்ளலே சாட்சி என்று....
-
நான் கண்ணை மூடி
கடவுளை வணங்கும் போது
என் கண்ணுக்குள்
நீ தெரிகிறாயே....
இதுதான் கணவனே
கண்கண்ட தெய்வம்
என்பதா...
-
உன் மீசை
என்னை தைக்கும் போதெல்லாம்...
என் வாழ்க்கை நெய்யப்படுகிறது...
-
நான் சமைத்த பாவக்காயை
நீ விரும்பி சாப்பிடும் போது
பாவக்காய்
புண்ணியக்காய் ஆகி விடுகிறது...
--
தாய்க்கு பின் தாரம் என்பது
பழமொழியாகவே இருக்கட்டும்...
என் கல்லறையில்
தாய்க்கு பின் கணவன் என்று
புது மொழி எழுதி வையுங்கள் ....
கட்டிக்க போறவனை
டேய் என்று கூப்பிடலாமா
என்று அதட்டுகிறாள் என் அம்மா...
கட்டிக்க போறவனைக்
கூப்பிடுவதற்கென்றே
கண்டுபிடிக்கப்பட்ட சொல்தானே டேய்...
என்னிடம் இருக்கும்
எந்த அழகு சாதனத்தை விடவும்
என்னை அழகாக்கிவிடுகிறது
உன் ஒற்றை பார்வை....
வேறு ஆண்கள் என்னை பார்க்கும்போது
முகத்தை திருப்பிக் கொள்ளும் நான்
நீ பார்க்கும் போது மட்டும்
குனிந்து கொள்கிறேன்...
இதிலிருந்து தெரியவில்லை...
நான் உன்னை தான்
காதலிக்கிறேன் என்று....
சோதிடர் என்ன நமக்கு
பொருத்தம் பார்ப்பது...
நீங்க என்னை பெண் பார்க்க வந்த போது
நான் காபி கொண்டு வந்த தட்டிலிருந்து
எந்த டம்ளரை நீங்க எடுக்க வேண்டும் என்று
நினைத்தேனோ
அதையே நீங்க எடுத்த போதே
நான் பார்த்து விட்டேன் பொருத்தம் ....
- தபூ சங்கர் (சேலையோர பூங்காவில் இருந்து)
nice collections anna
ReplyDelete