Saturday, January 16, 2010

ப‌டித்த‌தில் பிடித்த‌து...நட்பு காலம்

தோழியும் தோழனும்>>>>
*******************

நீ வயசுக்கு வந்த போது
தடுமாறிய என்
முதல் கூச்சத்திற்கு
குட்டு வைத்து
நம் நட்பை
காப்பாற்றியவள் நீ...
--
உன் பிறந்த நாளுக்கான
வாழ்த்து அட்டையில்
நல்ல வரிகள்
தேடி தேடி ஏமாந்த சலிப்பில்
தொடங்கிற்று
உனக்கான என் கவிதை...
--
கண்களை வாங்கி கொள்ள
மறுக்கிறவள் காதலி ஆகிறாள்
கண்களை வாங்கி கொண்டு
உன்னை போல
கண்கள் தருகிறவள்தான்
தோழியாகிறாள்...
--
போகிற இடத்தில்
என்னை விட
அழகாய் அறிவாய்
ஒருவன்
இருந்துவிடுவானோ
என்கிற பயம்
நல்லவேளை
நம் நட்பிருக்கு இல்லை...
--
தாய்ப்பாலுக்கான
விதை
காதலில் இருக்கிறது...

தாய்மைக்கான விதை
நட்பில் இருக்கிறது....

---

என் துணைவியும்..
உன் துணைவனும்
கேட்கும் படி
நம் பழைய மடல்களை
படித்து பார்க்க
வேண்டும் ஒரு
மழை நாள்..

எனது காதலியை
உனக்கு நான்
அறிமுகம் செய்து
வைத்த போது
நீ
விழுங்கிய எச்சிலில்
இருந்தது
நமக்கான நட்பு...
---
அந்த நீண்ட பயணத்தில்
என் தோளில் நீயும்..உன் தோளில் நானும்
மாறி மாறி
தூங்கி கொண்டு வந்தோம்.
தூங்கு என்று
மனசு சொன்னதும்
உடம்பும் தூங்கிவிடுகின்ற
சுகம்
நட்புக்குத்தானே இருக்கிறது...
--
பேருந்து நிறுத்தத்திற்கு சற்று தள்ளி நின்று
பேசுகிறவர்கள் காதலர்கள்...
நிறுத்தத்திலேயே நின்று பேசுகிறவர்கள்
நண்பர்கள்...
--
உனக்கு மடல் எழுத
உட்காரும் போது மட்டும்தான்
அப்புறம் எழுதி கொள்ளலாம்
என்பதற்கான அர்த்தமற்ற காரணங்கள்
மிக எளிதாய் எனக்கு கிடைத்து விடுகின்றன...


உனது சிறிய பிரிவிற்கான
வலியைச் சமாதானப்படுத்தி கொள்வதற்காக
பெரிய பிரிவுகளுக்கான
விடைபெறுதல்கள் நிறைந்த
அந்த
வானூர்தி நிலையத்திற்குள் போய்
அமர்ந்து விட்டு வந்தேன்...
--
குழந்தை பிறந்த செய்தி கேட்டு
ஓடோடி வந்த
கணவன்
குழந்தையின் முகத்தை பார்த்தான்..
நீ
என் முகத்தை
பார்த்தாய்...
----
காதலனோடு
பேசி கொண்டிருக்கையில்
தாவணியை சரி செய்தேன்...
நண்பனோடு
பேசி கொண்டிருக்கையில்
தாவணியை சரி செய்தான்...

-- அறிவுமதி(நட்பு காலம்)

No comments:

Post a Comment