விலை ஏதும் கேட்காமல்
விரும்பினேன் என்பதற்காக
வில்லிபுத்தூரில் பிறந்த
வஞ்சி என்
வெண் கைகளுக்கு
வளையல் வாங்கி
வந்தான் வசீகரன்.
எனக்கு
சில கவிதையான
விசயங்கள்....
மழையின் மண் வாசம்...
அம்மாவின்
ஆட்டுக்கறி குழம்பு...
சென்னையில்
பேருந்து பயணம்...
மாதவனின் வெண் சிரிப்பு...
ரேணு குட்டியின் வெகுளி தனமான கேள்விகள்/கோபங்கள்...
இவைகளுடன்...
வசீகரன் தந்த
வளையல்...
வழக்கமாக குயிலோசை
கேட்டு மட்டும்
காலையில் எழும் நான்...
இப்போதெல்லாம்
வசீகரனின் வளையலோசை
கேட்டு மட்டுமே
எழுகிறேன்.
ஒரு அழகான
மஞ்சள் வெயில்
நண்பகல் பொழுது
தென்னை சூழ்ந்த
என் வீட்டில்
வெட்கம் சூழ்ந்த
வஞ்சி என் வெண்
கைவிரல்கள் பிடித்து
அணிந்து விட்டான்
வளையலை வசீகரன்.
எனக்கு மட்டும்
வானவில்
முழுவட்டமாக மஞ்சளாக
தெரிகிறது.
வசீகரன் தந்த
வளையல் வண்ணம்.
ஒலிம்பிக் கொடியில் உள்ள
ஐந்து வளையங்கள்
ஐந்து கண்டங்களின்
ஒற்றுமை விளக்க.
ஓவியம் போல் உள்ள
வஞ்சி என் கைகளில் உள்ள
இரு வளையல்கள்
எம் இருவரின்
ஒற்றுமை விளக்க.
இதற்கு முன்
எப்போதும் உணவு
உண்ட பொதேல்லாம்
அதன் சுவை
உணரவில்லை.
ஆனால்,
வசீகரனின் வளையல்
அணிந்த பிறகு
உணவின் சுவை
உயர்ந்தது அமுது போல.
மழை நாளில்
செல்லும் போதெல்லாம்
குடை எடுத்துச்
செல்வது வழக்கம்.
இப்போது
வசீகரனின் வளையலே
வ(லை)ளையாக இருப்பதால்
குடை தேவைப்படுவதில்லை.
என் வீட்டு
ஊஞ்சலில் உள்ள
வளையம் ஒன்று
அறுந்ததால்
வசீகரன்
தந்த
வளையல் ஒன்று
மாட்டி
ஆடுகிறேன்
ஒரே பாய்ச்சலில்.
பிட்டுக்கு மண்
சுமந்தான் சிவன்.
என்னுடன் வாழ்வதற்கு
வளையல் வாங்கினான்
வசீகரன்.
விரிவுரையாளர் வசந்தா
வகுப்பில்
விலங்கியல் பாடம்
விளக்கும்போதெல்லாம்
வஞ்சி எனக்கு
வசீகரன்
வளையல் பற்றி
விளக்குவதாகவே
விளங்குகிறது
அதிகாலையில்
சன்னல் வழி
கதிரவனின் கதிரொளி
வந்த பின்
கண் விழிக்கும்
நான்
வசீ வளையல்
வந்த பிறகு
அதன் செவ்வொளியிலே
விழிக்கிறென்.
வீட்டு வாசலில்
வந்தாரை வரவேற்க
கட்டினேன்
மாவிலைத் தோரணம்.
பின்னாளில்
கட்டினேன்
மாவளைத் தோரணம்
வசீகரனை வரவேற்க.
குழந்தை வேண்டும்
என்று மகளிர்
கோவில் வாயிலில்
கட்டினர்
தொட்டில்.
வசீகரனின்
வாழ்க்கை வேண்டும்
என்று கலைமகள்
நான் மாட்டினேன்
வளையல் என்
மணிக்கட்டில்.
இந்த கோடை
காலத்திலும்
என் வாழ்வில்
வசந்தம்
வசீகரன் வளையல்
தந்ததால்.
மருத்துவர்
ஆகவில்லை எனில்
என்ன செய்து இருப்பாய்
என என் தோழி
கேட்டாள்.
வளையல் விற்கும்
வளையல்காரியாக
மாறியிருப்பேன் என்றேன்
அசட்டுத்தனமாக.
வீட்டில் பூஜையில்
கடவுளுக்கு ஆரத்தி
எடுக்கும் போது
அடிக்க மணிகள்
இல்லாததால்
வசீகரன் தந்த
வளையல் மணிகள்
மூலமாகவே
நடத்துகிறேன் பூஜையை.
ஒரு நாள் இரவு
வசீயுடன் செல்லிடைப்
பேசியில் பேசிக்
கொண்டு இருந்த போது
கால்கள் இடறி
கல்லூரியின் மூன்றாவது
மாடியில் இருந்து
கீழே விழுந்தேன்.
ஒரு
மரக் கிளை
வசீகர வளை
கொண்ட கரம் பிடிக்க
உயிர் பிழைத்தேன்.
சிறு வயதில்
உடல் நலம் இல்லை
எனில்
மருத்துவரிடம்
செல்வது வழக்கம்.
இவ்வயதில்
உடல் நலம் இல்லை
எனில்
வசீயின் வளையல்
அணிவது வழக்கம்.
ஒரு பெளர்ணமி்
ஆடி வெள்ளியன்று
மகாலட்சுமி் போன்ற
மங்கை என்
கரங்களில்
வந்தது வசீ தந்த வளையல்.
அன்று முதல்
திகழ்கிறது
என்
சுற்றுப்புறமும் வீடும்
லட்சுமி் 'கரமாக'.
ந.விஜய செல்வம்
No comments:
Post a Comment