Saturday, January 16, 2010

ஆதலால்.... காதல் செய்.

எங்கிருந்து வந்தாயடி....

இடது விழியில் தூசி
விழுந்த ஒரு கண நேரத்தில்
என் நாசி நிற்பதுபோல்
என் வலம் கடந்து சென்றாயே.....

சூரியனைக் கண்டால் மட்டும்
பொன்முகம் காட்டும்
சூரிய காந்தி போல்,
வசீகரன் என்னைக் கண்டால் மட்டும்
பூமுகம் காட்டும் என்
சாமந்திப் பூவே.....


உண்ணும் போது....
தேனீர் அருந்தும் போது....
பேருந்தில் பயணிக்கும் போது...
கோவிலுக்குச் செல்லும் போது....
கடற்கரையில் நான்
காற்றுக்கு காத்திருக்கும் போது......
பண்பலையில் எனக்குப்
பிடித்த பாடல்
ஒலிபரப்பும்போது.......
இவை எல்லாம் எனக்கு
நிகழும் போது...
நீ என் முன் தோன்றுவது
இயல்பாகிறது....

என் கண்ணில் நீ
விழுந்தது விதி....

இது
'காக்க காக்க' போல்
வந்த காதலா!

இல்லை...
நோக்க நோக்க
வந்த காதலா!
புரியவில்லை....
புரியவும் தேவையில்லை.....

நிஜத்தில் நீ என்னிடம்
பேச நினைத்ததெல்லாம்....
உன் கனவில் பேசுகிறேன் என
என் கனவில் நீ கூறுகிறாய்...
என்ன கனவு இது....
கனவில் கூட நம்
நினைவுகள் நிஜமாகிறது....

நீ என்னை காதலிக்க
சில காரணங்கள்...

எனக்கு....

சீப்பில் வாரும்
முடியை விட....
சீப்பில் வரும்
முடிகள் அதிகமாகிறது.....


வெள்ளிக் கம்பிகள்
அதிகமாவதால்...
பங்குச் சந்தையில்
வெள்ளியின் மதிப்பு
குறைகிறது......

மீசை வளர்ந்து வளர்ந்து
தாடியின் நீளம் அதிகரிக்கிறது


குழி விழுந்த கண்கள்
குவி வில்லைகளைத் தேடுகிறது......

தொலைக்காட்சியில்
சமையல் குறிப்புகளை
குறிப்பெடுக்கச் செய்கிறது.....

எல்லாவற்றுக்கும் மேலாக...
நங்கை உன் கூந்தலுக்கு
வாங்கி வைத்த
நட்சத்திரப் பூக்கள்
வாடுகிறது....

இது
ஜாதகம்,சாதகம்,பாதகம் பார்த்து
வந்த காதல் அல்ல...

பிறந்த ஜாதியைப் பார்க்காமல்
சிறந்த பாதியாக நீ எனக்கு வர
வந்த காதல்....

ஆதலால்....
காதல் செய்.


ந.விஜய செல்வம்.

No comments:

Post a Comment